1. 19 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி -51 ராக்கெட் பிப் 28 ல் விண்ணில் பாய்கிறது.
பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா 1 உட்பட 19 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிப்ரவரி 28 காலை விண்ணில் ஏவப்பட உள்ளன.முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா 1 637 கிலோ எடை உடையது இதன் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள். இது பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்படுகின்றன. இதுதவிர இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதீஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் இந்த ஏவுதலில் இடம்பெற்றுள்ளன.
2.விழுப்புரத்தில் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் திறப்பு விழா : ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை பிரித்து கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்துவரும் விழுப்புரம் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு புதிய பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
3. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீதிபதி குலசேகரன் தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணையம் அமைத்து முதல்வர் பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.
4. கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்: இரண்டாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி காஷ்மீரில் குல்மார்க்கில் தொடங்கியுள்ளது.மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் வாரியங்களை சேர்ந்த 1,200 பேர் கலந்து கொள்கின்றனர்.
5. 3 செய்தி நிறுவனங்களுடன் பேஸ்புக் வர்த்தக ஒப்பந்தம் :
ஆஸ்திரேலியாவில் செய்திகளை வெளியிட கட்டணம் செலுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து 3 தனியார் செய்தி நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.